மன்னை முத்துக்குமார்
தெய்வத்திருமகன் - உணர்வுகளின் ஃபோட்டோ காப்பி


இது ’ஐ எம் சாம்’ ஆங்கில படத்தின் தழுவல்! இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஓர் உன்னதமான படைப்பை தர, அது தழுவலானாலும் தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

தெய்வத்திருமகள் படத்தின் கதையையும், சில பல காட்சி அமைப்புகளும் ’ஐ அம் சாம்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல்தான் என்பதை யாரும் மறுத்து பேச முடியாது. இந்த தழுவல் விவகாரங்களைப் பற்றி பலரும் பேசிக்கொண்டிருக்க, அது உருவப்பட்ட கதையாக இருந்தாலும் அந்தக் கதையின் புனிதத்தன்மை குறைந்துவிடாமல் ஒரு மரியாதைக்குறிய படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

இதுவரைக்கும் தன்னை பல படங்களில் ஓர் அசாத்தியமான நடிகராக நிரூபித்த விக்ரம், தற்போதைய தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகை அனுஷ்கா, மைனாவின் மூலம் இதயங்களை கொள்ளைக் கொண்ட அமலா பால், சிரிக்கவும் சில நேரத்தில் கடிக்கவும் செய்கின்ற சந்தானம் என படத்தின் போஸ்டரே எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகிறது.ஆனால் எந்தவித அலட்டல்களும் அலப்பறைகளும் இல்லாமல் அமைதியான முறையில் படம் ரிலீசாகி உள்ளது.

உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறார் விக்ரம் (கிருஷ்ணா). இந்த வளர்ந்த குழந்தைக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த நேரம் தன் மனைவியை இழக்கிறார் விக்ரம். குழந்தை சாராவை (நிலா) ஐந்து வயதுவரை தானே வளர்க்கிறார் விக்ரம். குழந்தை படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை அமலாபால். அமலா பாலும் சாராவும் நண்பர்களாகவே பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் குழந்தை சாரா அமலாபாலின் அக்கா குழந்தை என்றும், அவரின் அக்கா விக்ரமை காதலித்து மணந்தார் என்றும் தெரியவர... அந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்!

குழந்தையின் தாத்தா செல்வாக்கு நிறைந்தவர். அவர் விக்ரமிடமிருந்து குழந்தையைப் பிரித்துவிட, மனநலம் பாதிப்பான கிருஷ்ணாவிடம் குழந்தையை ஒப்படைக்க மறுத்து, அனுஷ்கா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கான வழக்கை மூத்த வழக்கறிஞர் நாசரிடம் ஒப்படைக்க, அனுஷ்கா அவ்வளவு பெரிய வழக்கறிஞரிடம் போராடி குழந்தையை கிருஷ்ணாவிடம் ஒப்படைப்பதும், அதன் பிறகு நடப்பதுமே கதை.

தமிழ் சினிமாவின் வழக்கமான காதல், மோதல் விஷயங்களை ஓரம்கட்டிவிட்டு ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை ஹீரோயிசமாக மையப்படுத்தி எடுத்த விஜய்யின் தில்லுக்கு ஒரு சபாஷ்!

விக்ரமின் நடிப்பு... கேட்கவா வேண்டும்! அசத்தியிருக்கிறார் மனிதர். கோர்ட்டில் கேட்கிற கேள்விகளுக்கு அவர் கையை பிசைந்தபடி பதில் சொல்லும்போது அவரின் கண்கள் மட்டும் அல்ல, அனைவரின் கண்களும் ஈரமாகியிருந்தன. ஆனால், தன் நடிப்பில் விக்ரமிற்கே சவால் விட்டிருக்கிறார் சிறுமி சாரா. பிரிவின்போது இருவரும் நிலாவைப் பார்த்து பேசும்போது ஆயிரம் அழகான கவிதைகள் இதயத்தில் வலம்வருகின்றன.

அனுஷ்காவும் அமலா பாலும் கொடுத்ததை சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள். ஆபாசம் கலக்காத அனுஷ்காவை காண்பித்த இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் ஒரு சல்யூட். சந்தானம், கதைக்களத்தின் சீரியஸ்னஸ் கருதி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் முதல் பாதியில் சிரிக்க வைக்கிறார்.

’தாயாக தந்தை மாறும் புது காவியம்! இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்!’ என்ற முத்துக்குமாரின் உணர்வான வரிகளுக்கு உயிர் சேர்த்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். நிரவ் ஷாவின் கேமரா இமைகளுக்குள் புகுந்து இதயத்தில் தங்கிவிடுகிறது.

எல்லாம் சரி! ஆனால் இது ஆங்கில படத்தின் கதை என்பதே இந்த படைப்பின் மீது விழுந்திருக்கும் காயம். பல ஹாலிவுட் கதைகளை ரிபீட் அடித்து கமர்ஷியல் பஞ்சாமிர்தமாக்கும் படங்களுக்கு மத்தியில் இது பரவாயில்லை என்றே இதயத்தை தேற்றிக்கொள்வோம்.

தெய்வத்திருமகன் - வார்த்தைகளால் எழுத முடியாத உணர்வுகளின் ஃபோட்டோ காப்பி
நன்றி- நக்கீரன்.
-------

இந்த தெய்வத்திருமகன் , டாக்டர் சீயான் விக்ரம்,குழந்தை நட்சத்திரம் சாரா, ஜி.வி பிரகாஷ் ,பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஆகியோருக்கு தேசிய விருதை பெற்றுத்தரும்.

ஊமையின்குரல்
2 Responses
  1. bandhu Says:

    //இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஓர் உன்னதமான படைப்பை தர, அது தழுவலானாலும் தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.// இதை சொல்ல வேண்டியவர்கள் I AM SAM ஐ தயாரித்த நியூ லைன் சினிமா காரர்கள்!


  2. எத்தனையோ படங்கள் ஹாலிவுட்டிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது, கதையை எடுத்து பிராந்திய மொழியில் உரு பெற்று இருக்கிறது, அவற்றில் தெய்வத்திருமகன் ஒப்பற்ற ஒரு படைப்பாக தமிழில் வந்து இருக்கிறது. அதில் விக்ரமின் நடிப்பை பாருங்கள்..